
உமா. கொஞ்சம் கருப்பாக இருப்பாள். அதனால் தாழ்வுமனப்பான்மையும் அதிகம். ஆனால் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அடல்செண்ட் காதல் என்றும் சொல்லலாம். நான் தான் சொன்னேன் .
உமா ..( அவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் அவளை அக்கான்னு கூப்பிடறா என்பாள் அம்மா .நீ அப்படி கூப்பிடறதாயிருந்தா என் கூட பேசாதே என்றாள் உமா)
நீ என்னைக்காவது உன் தலைமுடியை ரசிச்சுக்கிருக்கிறாயா?
உமாவுக்கு நல்ல அடர்த்தியான கூந்தல். சரியாக பராமரிக்காமல் செம்பட்டை பிடித்திருந்தது.
உமா எல்லோருக்கும் இப்படிமுடி அமையாது,.அபூர்வ ராகங்களில் ஸ்ரீவித்யாக்கு இருக்குமே அந்த மாதிரி..(ஸ்ரீவித்யா கமல் மிருந்தங்கம் வாசிப்பதை கேட்டு, பாதி குளியலில் வருவாரே..) எங்கம்மாவிற்கும் உன்னைப்போல்தான். அவளும் அலட்சியமாகவே இருப்பாள்..நான் சொன்னது உமாவை மாற்றி விட்டது. கூந்தலுக்கான டிப்ஸை தேடித்,தேடி படிக்க ஆரம்பித்தாள். முட்டை போட்டு ஊறவைத்தல், செம்பருத்தி இலை,மருதாணி இலை, கறிவேப்பிலை அரைத்து, புளிக்காத தயிர் சேர்த்து குளித்தல். அவள் கூந்தல் பொலிவு பெற ஆரம்பித்துவிட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் பொறாமை படும்படி.
உனக்குத்தாண்டா தேங்க்ஸ் சொல்லணும் என்றாள். தலையை காய வைத்துக்கொண்டே.. எனக்குள் ஏதோ கிளர்ந்தது.
உமா எனக்கொரு ஆசை என்றேன்.
என்னடா என்றாள். ஒன்றும் சொல்லாமல் அவள் கூந்தலை கையில் எடுத்து முகர்ந்தேன். கண்களை மூடி அந்த வாசத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று இறுக அணைத்து முத்தமிட்டாள் உமா. வயசு வித்தியாசம் இருந்தால் என்ன? படிப்பு முடிந்ததும், வேலைக்கு போய் உமாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். உன் கூந்தல் அழகுக்கே எத்தனை ராஜகுமாரன்கள் போட்டி போடப்போகிறார்கள் பார் என்றாளாம் உமாவின் பாட்டி. இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது.
கதையாகவே போனது. உமாவும் திருமணம் ஆகி போய் விட்டாள். அந்த மாப்பிள்ளைக்கு முன்வழுக்கை. கொடுமை.எப்படி சம்மதித்தாள்? உமா விடை பெறும்போது அழவில்லை. சிரித்தாள். மெதுவாக காதில் சொன்னாள்.
“அந்த முத்தத்தை மறந்துடுவியாடா?
மறக்க முயற்சி பண்றேன்
ப்ளீஸ்.. என்றவள்.. மறக்காதடா பிரசன்னா என்றாள் ஹஸ்கி வாய்சில்.
பிரசன்னா ? அப்படியென்றால் அவள் பைரவியா ?எதை மறக்காதே என்று சொன்னாள். அந்த முத்தத்தையா? அவளையா?
உமாக்கா வந்திருக்காடா என்றாள் அம்மா. எத்தனை வருடம் ஆயிற்று பார்த்து. சுரீரென்று அவள் கூந்தல் வாசம் நாசியில் உணர்ந்தேன். அனிச்சையாய் உதடுகளை ஈரப்படுத்தி கொண்டேன். லேசாக உப்பு கரிக்கும் சாக்லெட் சுவை . நான் லீவில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தேன். பாப் வெட்டிக் கொண்ட என் மனைவி, மகள். உமா ..அவளின் அந்த கூந்தல் . அந்தாளின் வழுக்கை.. நிச்சயம் உமாவின் கூந்தலை அவன் வெட்டியிருப்பான் என்று தோன்றியது.
அன்று மாலை உமா வந்தாள். மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.
என்னடா இந்த கெட்ட பழக்கம் என்றவள், காதருகே வந்து எனக்கு சிகரெட் ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்டா என்றாள் கிசுகிசுப்பாய்.
கொஞ்சம் வயசாகியிருந்தது. அந்த கூந்தல் இன்னும் அதே பளபளப்பு மாறாமல் அப்படியே..
மனதை படித்தவள் போல் சொன்னாள்.
திரளபதிக்கு அவள் கூந்தலால்தான் எல்லாக்கஷ்டமுமாம்
யார் சொன்னா என்றேன்
என் மாமியார்தான். அவளுக்கு எலிவாலைப் போல் இருக்கும். ஆன மட்டும் தண்ணி குடிச்சா. இதை சிரைச்சுடுடின்னு.
அன்னிக்கு பார்த்தாப்லயே இருக்கு உமா . அவர் எப்படியிருக்கார்? எப்படியிருக்கு வாழ்க்கை என்றேன்.
கருநாகமாக மின்னிய ஜடையை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டே சொன்னாள்.
‘இது ஒன்னுதாண்டா மிச்சம்”