மாஸ் ஆடியன்சின் ரசனைக்கு இறங்கி வந்து கதை சொல்லுதல் ஒரு விதம் . தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதில்லை . வணிக ரீதியான சமரசங்கள் மற்றும் விமர்சனங்கள் இடையூறாகவே இருக்கும் . மேல் நாட்டு இயக்குநர்களின் நிலை வேறு . தமிழில் ஒரு சில இயக்குநர்களே இருக்கிறார்கள். மிஷ்கின் அதை அநாயாசமாகவே செய்திருக்கிறார் . அதற்கு முதலில் ஒரு “ரெமி மார்ட்டீன்” சல்யூட் மிஷ்கின்.
நாம் கடந்து செல்ல வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை . கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது . நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படிதான் இருப்பதாக எனக்கு தோன்றியது வெற்று ஃப்ரேம் முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது . அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள் . நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள் . நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது . காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது . மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல.. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது . பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது . சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம் . பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ் . ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார் .
எல்லோரும் நல்லவர்கள்தான் என்கிறார் மிஷ்கின் . உண்மைதான் . ஒரு லாரி டிரைவரின் பாத்திரம் அது உண்மைதான் என்கிறது . சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும் அந்த இளம்பெண்…(நொடியில் எத்தனை பாவம் காட்டுகிறாள் அவள்) அடுத்த காட்சியில் டிராக்டர் ஓட்டி வருவது பா. ராவின் கவிதை . ஒரு கால் இல்லாதவனின் ஊன்றுகோல் ஜாதிக் கலவரத்தில் வெட்டப்படுதல் , அவன் பேசும் வார்த்தைகளும் , முக பாவனைகளும் ,அறிவாளை தூக்கி கொண்டு வரும் இளநீர்க்காரர் .வெள்ளந்தியான மனிதர்களின் அடையாளத்தை நமக்கு உணர்த்துகிறார் . எங்கே? எதற்கு செல்கிறார்கள் என்பதே தெரியாமல் வரும் மோட்டார் பைக் இரட்டையர்கள் , ஹனிமூன் செல்லும் ஜோடிகள் என்று மனிதர்களின் தரிசனம் . காணப்புண்ணியம்.
அம்மாவை தேடி செல்லும் இரண்டு சிறுவர்களின் பயணம்தான் கதைக்களம் . அந்த மொழிப்படம் , இந்த மொழிப்படம் . நகலெடுத்தார் . பிரதியெடுத்தார் என்பதெல்லாம் வீண் வாதங்கள் . கையாடுவதற்கும், கையாள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான்.
சினிமா ஒரு காட்சி ஊடகம்தான் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின் . வார்த்தைகளுக்கிடையே மெளனங்கள். அதுவும் இல்லாதபோது இசை . சில இடங்களில் இரண்டுமே இல்லை . இரண்டே பாடல்கள் . அதுவும் பார்வையாளனின் மனநிலைக்கேற்ப ஒலிக்கிறது . பிண்ணனி இசையில் மீண்டும் தான் ராஜாதான் என்கிறார் இளையராஜா. அம்மா பாடல் கிளிஷேதான். இருந்தாலும் உறுத்த வில்லை.
சிறுவன் அகி . கண்களுக்கிடையே அந்த வளையம் . அழுத்தம் திருத்தமாக பேசுதல் . பாட்டியை கை பிடித்து பராமரிக்கும் விதம் . மாமா என்றும் அம்மா என்றும் அழைக்கும் போது காட்டும் முகபாவம் . இந்த வருடத்திய சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்கலாம் . கிடைக்க வேண்டும் .
கதையில் நாயகிக்கு பெயர் இல்லை . பெயர் சொல்லும் அளவுக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் இல்லை.
பெயரில் என்ன இருக்கிறது . நாயகனின் (மிஷ்கினின் ) பெயரே படம் முடியும் போதுதான் நமக்கு தெரிகிறது . தெறித்து பிதுங்கும் விழிகள் , அரை மொட்டை தலை ,நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளில் கத்துவது..அதுவும் மெண்டல் என்று அவர் உச்சரிக்கும் போது ..கிளாஸ்.. ஒரு எளியவன் , வலியவனிடம் அடிபட்டு அழும்போது , அவனை சார்ந்தவர்கள் வந்து விட்டால் எப்படி ரியாக்ட் செய்வான் . சாமர்த்தியமாக இந்த காட்சியில் மிஷ்கின் முகத்தை காட்டாமல் ஃப்ரேம் வைத்திருக்கிறார் . கை ,காலை உதறி வெளிப்படுத்தும் இயலாமை, ஆக்ரோஷம், இப்ப வாங்கடா..அடித்து பாருங்கடா என்கிற அறைகூவல் மாதிரியான பாவனைகள்.சிம்ப்ளி சூப்பர்ப் மிஷ்கின் .
ரசிகர்கள் விரும்புவதை தருகிறோம் என்று புளித்த மாவில் செட் தோசை சுட்டு திரியும் இயக்குநர்கள் மத்தியில் எனக்கு பிடித்ததை மக்களுக்கு தருகிறேன் என்று கூறும் மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் . விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம் .
ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....
48 comments:
அண்ணன்கள் எல்லோரும் அசத்தலாய் விமர்சித்து பார்க்கவேண்டுமென்ற ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.
எல்லோரின் விமர்சனத்தைவிடவும் வித்தியாசமாயும் அழகாயும் இருக்கண்ணே!...
பிரபாகர்...
நன்றி. நல்ல படத்தைப் பற்றிய நல்ல விமர்சனம்.
நன்றி அண்ணா.. எங்க பார்கன்னு தான் தெரியல.. :(
க்ளாஸ் !!!!!!!! விமர்சனம் ...,ஆவலை தூண்டி விட்டீர்கள்....,
/ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை.... /
:). இதைவிட ஒரு பாராட்டு பார்க்க முடியாதுஜி.
//விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம்//
நாங்களும்! :)
///
ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....
///
சினிமா விமர்சனத்தில் கவிதை.
கவிதை போன்ற படத்திற்கு கவிதை சரிதான்.
அன்பு நித்யன்
Arumai. Padam romba pathichiduchu pola. Paarkkanum.
சூப்பர்.. ஏ கிளாஸ் விமர்சனம்..! நன்றி தலைவரே..!
இதுதான் உங்க கிட்ட எதிர்பார்க்கிறோம்
நெகிழ்ந்து நெகிழ வைப்பது. இந்த நுட்ப பார்வையும் நூதனக் கதை சொல்லலும்
மிஸ்கின் & தண்டோரா
ஹேட்ஸ் ஆப் மணி & மணிஜி
ப்ச்.. கலக்கிட்ட தல!
அண்ணே
செம விமரசனம் உங்க வாயால பாராட்டி பிடிச்சிருக்குன்னு வந்திருச்சி,மிக்க மகிழ்ச்சி,ஊருக்கே வந்து பாத்துடறேன்.
ithe ithe ithe thaan ethirpaakirom ezhuththaalare
அழகான விமர்சனம்
தலைவரே.. மீண்டும் இரவு காட்சி பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து வருகிறேன். மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது ஒவ்வொரு ப்ரேமும், புதுபுதுசாய் கதை சொல்கிறது ஒவ்வொரு முறையும்..
மணிஜீ..அருமையான விமரிசனம்...
ஒரே விமரிசனம் போதும்..நீங்கள் அனைவர் எழுத்தையும் மிஞ்சும் வீரர் என்பதை உணர்த்த
ஆமா ஜி! சொல்லி கூட்டிட்டுப்போனாரு! சொல்லாம சொல்லிட்டாரு மிஷ்கின்!
கடைசி ரெண்டு வரிகளுக்கு ரெண்டு நாள் எக்ஸ்டென்ஷன் ப்ளீஸ்!!
தலைவரே நீங்க சொன்னது நிஜமே ... பேச வார்த்தைகள் இல்லை...
இந்த மாதிரி எழுத்துலதான் சாமி எனக்கு விளம்பரக்காரனை ரொம்ப ரொம்ப பிடிக்கிறது.
அசத்தலான படத்துக்கு கலக்கலான விமர்சனம்.
எழுத்து பழுத்து இனிக்குதுண்ணே...
நல்ல சிலாகிப்பு மணிஜி...
டகேஷி கிட்டானோ மிஷ்கின்னை ஆசிர்வதிப்பாராக :)
வாசிக்கிறவங்களெ உள்ளெ இழுத்துப் போடுற எழுத்து. பார்க்கணும். உடனே தியேட்டருக்கு ஓடமுடியாத ஒரு கடமைக் கட்டு. கட்டாயம் பார்த்திடுறேன். நன்றி.
ஜி, இந்த சுட்டியில் ஒருவன் என்னமோ உளறியிருக்கிறான்
http://puthiyaaadhavan.blogspot.com/2010/11/blog-post_26.html
simply superb anna. your review really inspired me to watch this film in theater.
அன்பு மணிஜி,
தரமான படம் என்று தெரிகிறது... தரமான பார்வை உங்கள் எழுத்து மணிஜி, வியப்பில் நிறுத்தும் பார்வை... அழகான சட்டங்களை (FRAMES) சொல்லும் எழுத்து... பார்க்கத் தூண்டுகிறது எழுத்து... எப்பொருள் யார் வாய் என்பது முக்கியம் மணிஜி... கொல்றீங்க!
அன்புடன்
ராகவன்
//கையாடுவதற்கும், கையாள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான். //
//விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம் .//
மணிஜி, சின்னச்சின்ன வார்த்தைகள்ல நகாசு வேலைகாட்டி பின்றீங்க! போன ஜென்மத்துல பொற்கொல்லரா இருந்திருப்பீங்களோ??!!!
நிறைவான ஒரு விமர்சனம். நன்றி !
விமர்சனம் அழகு!
தமிழில் எப்போதாவது ஒருமுறைதான் இப்படி ஒரு பரவசமான திரை அனுபவம் கிடைக்கும். உணர்ந்த அற்புதத்தை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள் மணிஜி.
நீங்கள் சொன்ன 'புரட்டிப்போடுதல்' என்பது இதுதானே அண்ணா.
அருமையான விமர்சனம் மணிஜி!!அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.. அழகான நடை அற்புதமாய் கூடி வந்துள்ளது.. நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்த படம்..உண்மையைச் சொல்லப் போனால் “எந்திரனை” விட இதைத் தான் தமிழகமே எதிர்பார்த்திருக்க வேண்டும்..
வெகு நாட்கள் கழித்து இலக்கியத்தரமாய் ஒரு படமும் அதற்கான அருமையான விமர்சனமும்
நன்றி மணிஜீ
பல இடங்களில் விமர்சனம் படித்த போது, நந்தலாலா படம் தான் கவிதையாய் காட்சியில் விரிகிறது என்று நினைத்தேன்....
ஆனால், மணிஜீ... இங்கே அது உங்களின் எழுத்திலே கவிதையாய் விரிந்த அதிசயமும் நிகழ்ந்ததே...
நல்ல விமர்சனம்... நல்ல படம்.. ஐங்கரனுக்கு மற்றுமொரு வெற்றிப்படம்.
மிஷ்கின் கொஞ்சம் வாயை நீளாமல் பார்த்துக்கொண்டால், இன்னமும் நமக்கு நல்ல படங்கள் கிடைக்க வாய்ப்புண்டு...
பொறுத்திருந்து பார்ப்போம்....
தலைவரே,
என்ன இது? நீங்க, கேபிள், கே.ஆர்.பி.செந்தில் எல்லாருமே படம் அருமையா இருக்குங்கறீங்க. உடனே பார்க்கனும் போல இருக்கு. இன்னும் எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை.
அவ்வளவு நல்ல படம் ரிலீஸ் பண்ணவா இத்தனை தாமதம்?
நலமா அண்ணே!
சிறந்த படத்துக்கு சிறந்த விமர்சனம்.
நன்றி. ஒரு சின்ன இடைவேளை கிட்டியது. தியேட்டருக்கு ஓடிப்போனேன். பார்த்தேன்.
//தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதில்லை. மிஷ்கின் அதை அநாயாசமாகவே செய்திருக்கிறார்.//
இதேதான்!
இடையிட்டு வரும் ஓரொரு கேரக்ட்டரிலும் கூடத் 'தாய்மை' இன்னதென்று ஒளிர்வித்துச் செல்கிறார். ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி மணிஜி.
||பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... ||
இந்த விமர்சனமும்...
வருகை தந்து பின்னூட்டமிட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
ராஜசுந்தர்ராஜன் சார் ..மிக்க மகிழ்ச்சி...படம் பார்த்து விட்டு அதை பகிர்ந்தமைக்கு..சார் நீங்கள் உங்கள் விமர்சனத்தை எழுதுங்களேன் ..முதல் இடுகையாக இருக்கட்டும்.நன்றி சார்.
நல்ல படத்தைப் பற்றிய நல்ல விமர்சனம்.
இசையும் ,பாத்திர படைப்புகளும்,காட்சிகளும்,காட்சிகளற்ற மொழியும்,அள்ளிக்கொள்ள தோன்றும் சிறுவனும் ,எல்லாவற்றிற்கும் மேல் பாத்திரங்களின் நடையில் [நடக்கிற விதம்,கால்கள்]வுணர்வுகளை பதிய வைத்ததும் அருமை ,மணிஜியின் பார்வை இதம்.
ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....
இந்த பாராட்டை விட மிஷ்கினுக்கு என்ன வேணும்.
weldone maniji
நந்தலாலா.
வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன், ஆனால் ‘நந்தலாலா’ என்றழைக்கப்படுகிறவன். குருதித் தொடர்பால் அல்ல; குணத்தால் ஆன செயல்பாட்டால் வருவது - ஆம், தாய்மை என்பது ஒரு குணம்.
“நீங்க என்ன சாதிண்ணே?” என்று அவனின் குருதிவழி கண்டுபிடிக்க வினவுகிறாள் சாதிச்சண்டையில் வற்கலவிக்கு ஆட்பட இருந்து அவனால் காப்பாற்றப் பட்டவள். அவன் சொல்கிறான், “மென்ட்டல்”.
தன் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய அத்தனை பேரும் - இயேசு உட்பட - “மென்ட்டல்” என்றே இனம் காணப்பட்டு இருக்கிறார்கள். பிறவியால் வருவதல்ல காருண்யம். தாய்பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள நாம் சாதி வழி அடையாள அடிதடிகளைத் தாண்டவேண்டும். ஊன்றுகோல் நொண்டி ஒருவனாற்கூட இத் தாய்மையை உணரமுடிகிறது. காட்சியைக் கண்ணேற்கும் நமக்கு வெட்கத்தால் விழிகலங்க வேண்டும்.
பள்ளி மாணவி, இளநீர்ப் பெரியவர், மோட்டார் பைக் மோட்டா மனிதர்கள், பெருவழிப் பரத்தை என்று எல்லாருக்குமே அவரவர் பாடு உண்டென்ற போதிலும் உரிய வேளையில் வெளிப்பட்டுத் தழுவும் தாய்மையும் உட்பொதிந்து இருக்கிறது. பீர் அடித்து, பிறரைக் கோட்டிகாட்டிக் கழியும் ஓர் உல்லாசப் பயணமே வாழ்க்கை என்று கொள்கை கற்பித்தவர்களுக்கு இது வெளிப்பட வாய்ப்பில்லை. கடத்தி, வியாபாரக் காசு பண்ணுகிறவர்களுக்கு அறவே இல்லை. தனக்குள் இன்றி ஒரு தூரத்துக் கட்டளையாய்த் தாய்மையை ஏற்றுச் செயல்படும் புதுமாப்பிள்ளைத் தனிமை விரும்பிகளுக்கு அது முழுமைப்பட வகையில்லை.
பைத்தியக் கூட்டத்தில் மகனை விடநேர்ந்ததில் தானும் பைத்தியமாகிப் போவதே தாய்மை என்று உரத்தாலும், கைவிடப் பட்டு, இன்னொன்று கிட்டிய அடைக்கல நிலையில், சிறுவனுக்கு இல்லையென்று போகும் அந்தத் தாயையும் என்ன குறைசொல்ல? திரும்பு வழியில் எதிர்ப்பயணம் வந்து, பார்வை மாறி, முதல்மகனின் படிமக் கையிருப்பைப் பறத்திவிட்டுப் போகும் அவள்மீதும் இரக்கமே மிஞ்சுகிறது.
பனிக்குடத்தில் நீந்திய களிப்பும், அது உடைந்து வெளிக்காற்று தீண்ட வரும் அழுகையும்.
ji, your review is so superb. Classic. I love this film.
படத்தப் பாத்துட்டு வந்து எதானும் சொல்றேன்! இப்போதைக்கி தும் ததா!
இளையராஜா பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? சரி இல்லையா அல்லது கவனிக்கவில்லையா???
KIKUJIRO என்ற japanese மொழி திரைப்படத்தை இந்த blogger ம இங்கு comments எழுதியவர்களும் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன். இது கையாடலோ கையாள்வதோ அல்ல, திருட்டு...
பனிக்குடத்தில் நீந்திய களிப்பும், அது உடைந்து வெளிக்காற்று தீண்ட வரும் அழுகையும்.
:) :(
எனக்கும் படித்ததில் பிடித்தது
தலைவரே...
நேற்றைய விஜய் டிவி நிகழ்வில், நந்தலாலாவின் டைட்டிலில் கிகுஜிரோ குறித்து ஒரு வரி சொல்லியிருக்கலாமே என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு அங்கு யாரிடமும் பதிலில்லை.
அட்லீஸ்ட் இவர்களிடம் நாம் கேட்கவாவது முடிகிறது என்று மனதை சாந்தப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
அன்பு நித்யன்.
மணிஜி, உங்களுக்குள்ளும் ஒரு மிஷ்கின் இருக்கிறார். புது வருடத்தில் வெளியே கொண்டு வாருங்கள்.
வாழ்த்துகள்.
Post a Comment