Saturday, December 26, 2009

பத்தினி


முன் குறிப்பு : சின்ன கதைதான். ஸ்கிரால் பண்ணாமல் படித்தால் பரிசு வெல்லும் வாய்ப்பு உண்டு.


என்ன சாமீ ! ஆளையே காணும்?

எங்க சுந்தரம். வேலை சரியா இருக்கு. சரி சரக்கடிக்கலாமா?

இதெல்லாம் கேப்பாங்களா என்ன? நீங்க இந்த நேரத்துல வந்தா அதுக்குத்தானே. காசை கொடுங்க. வாங்கியாரேன். பிராந்திதானே.

சுந்தரம் ? என் வீட்டுக்கு அருகில் சலவை கடை வைத்துள்ளான். எப்பவாவது வருவேன். அழுக்கு மூட்டையை திண்டு மாதிரி போட்டு உட்கார்ந்து தீர்த்தவாரி. சரக்கு உள்ள போயிட்டா, சுந்தரம் நிறைய பேசுவான்.

மூன்றாவது ரவுண்டில் சுந்தரத்துக்கு மூடு வந்திருச்சு.

சாமி நாளையேலேர்ந்து ஒரு மாசம் சரக்கு இல்லை. விரதம்.

என்ன விரதம்? சபரிமலைக்கா?

இல்லைங்க. இது சீதாம்மாவுக்கு.

அது என்னய்யா புதுசா இருக்கு. நா இதுவரைக்கும் கேள்விபட்டதில்லயே!

அசோகவனத்திலேர்ந்து சீதையை மீட்டு கிட்டு வந்த வுடனே அந்தம்மா தீக்குளிச்சது இல்ல. அதுக்கு நாங்கதானே காரணம் !

என்னய்யா உளர்றே?

ஆமாங்க. அந்தம்மாவோட வஸ்திரத்தையெல்லாம் வெளுக்க போட்டாங்களா?
அப்ப ஒரு வண்ணாத்தி கேட்டா ! இத்தினி நாள் இந்தம்மா ராவணன் கிட்ட இருந்தாங்களே . சுத்தமா இருந்திருப்பாங்களான்னு.

அடப்பாவிகளா !

முழுக்க கேளு சாமி. அந்தம்மா அங்க இருந்தப்ப ஒரே வஸ்திரத்தைதான் உடுத்தி கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மா தெய்வப் பிறவி இல்லையா? அதனால் அது நிறம் மாறாம இருந்துச்சாம். ஆனா ஒரு கோட்டிக்கார பொம்பளைதான் இதை கொளுத்தி போட்டா. இந்த விஷயம் மகாராசா காதுக்கு போச்சு. அவர் உடனே என் பட்டத்து ராணி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எப்ப இப்படி ஒரு பேச்சு வந்திடுச்சோ, அது எனக்கும் உறுத்தலாதான் இருக்கும் . அதனால..

அதனால..?

சீதா தேவி தான் சுத்தமாத்தான் இருக்கிறேன் நிரூபிக்க அக்னியில மூழ்குவாங்கன்னு அந்தம்மா கிட்ட கலந்துக்காமயே அறிவிச்சுட்டாரு. ஊர் சனம் மொத்தமும் அந்த வண்ணாத்தி கிட்ட போய் நின்னுச்சாம். அடியேய்.. உன்னாலதான் இம்புட்டும். வாய் கொழுப்புல சொல்லிபிட்டேன்னு சொல்லுடின்னு கெஞ்சினாங்களாம். ஆனா அவ எனக்கு வந்தது நியாயமான சந்தேகம்தான். நான் அப்படி எங்கயாச்சும் போயிட்டு வந்தா நீர் என்ன சொல்வீர்னு அவ புருசன் கிட்ட பதிலுக்கு கேட்டாளாம்.

அப்புறம் என்ன நடந்துச்சு ?

அப்புறம் என்ன ! சீதாம்மா தீக்குளிச்சு தான் பதிவிரதைன்னு நிரூபிச்சிட்டு காட்டுக்கு பிள்ளைகளை தூக்கிட்டு போயிடுச்சு. அந்த பாவத்துக்கு பரிகாரமாத்தான் நாங்க வருசம் ஒருக்கா சுத்த பத்தமா இருந்து தீ மிதிக்கிறோம்
ஆனா காலு பொசுங்கிடும். அது சீதாம்மா எங்களுக்கு கொடுக்கிற தண்டனையா ஏத்துகிடுறோம்.

எனக்கு ஏனோ மனைவியின் ஞாபகம் வந்தது. சுந்தரம் இன்னும் கொஞ்சம் சரக்கு வாங்கிட்டு வா !

சாமி ஏற்கனவே அதிகமாயிடுச்சு. போதும்.

இல்லை சுந்தரம் . எனக்கு மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

இன்னும் போதை ஏறியவுடன் நான் சுந்தரம் “ என் பொண்டாட்டி பத்தினியா இருப்பாளான்னு கேட்டேன்.

அட ! வேணும்னா அவங்களை தீக்குளிக்க சொல்லிப் பாரேன் .

இந்த கதையை அவளிடம் சொன்னதற்கு சிரித்தாள்.

இல்லை. நீ கூட அடிக்கடி ஆபிஸ் விஷயமா உங்க எம்.டி கூட வெளியூர் போற. ராத்திரியில் கூட அவன் கூட தங்கற. ஒரு சராசரி மனுஷனுக்கு வர்ற சந்தேகம்தான் டியர்.

சரி. நான் காலையில் நிரூபிக்கிறேன். குட் நைட்.

காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி. டியர் காபி என்றேன்.

பக்கத்தில்தான் படுத்திருந்தாள். இரவு அவளிடம் ஏடாகூடமாய் பேசியது மங்கலாக நினவில் இருந்தது. தொட்டு பார்த்தேன். சுட்டது. பதறிப் போய் என்னம்மா ஆச்சு ? என்றேன்.

ஒன்னுமில்ல. ராத்திரி முழுக்க தூங்கலை. அதான். காபி நீங்களே கலந்துக்கங்க. அப்படியே எனக்கும் ப்ளீஸ்!!

சே. என்ன ஜென்மம் நான். சாரி டியர். என்னமோ போதையில் உளறிவிட்டேன். மனசுல வச்சுக்காதே.

காபி ப்ளீஸ்.

முகம் கழுவினவுடன் தான் கொஞ்சம் ரீலீப் இருந்தது. பாலை கட் பண்ணி ஊற்றும் போது கதவை தாளிடும் சத்தம் கேட்டது. அவள்தான்.

என்னம்மா பண்றே? ஏன் கதவை மூடுற?

ஜன்னலருகில் நின்றிருந்தாள். முகம் அகோரமாய் இருந்தாற் போல் பட்டது. சட்டென்று அந்த நாற்றத்தையும் உணர்ந்தேன். என்னவோ தப்பு? அதற்குள் ஆவேசமாக அவள் குரல் கேட்டது.

நிரூபிக்கிறேன்னு சொன்னேன் இல்ல.

ஒரே உரசலில் பற்றிக் கொண்டது.

“கொலையும் செய்வாள் பத்தினி”



48 comments:

நித்யன் said...

தலைவரே...

கதை படிச்சிட்டு வர்றேன்.

அன்பு நித்யன்

நித்யன் said...

கதை தொடர்ச்சி...

தொட்டுப் பார்த்தேன். திரும்பிப் படுத்தாள். நான் எதிர்பார்த்திருந்தபடியெல்லாம் கன்னமெல்லாம் வீங்கவில்லை.

“ நீங்க சொன்னதை நானும் யோசிச்சுப் பார்த்தேன். உங்க சந்தேகம் நியாயமானதுதான். இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு பண்ணிடலாம்” - அவளின் தீர்க்கமான பார்வையும் வார்த்தைகளும் என்னை கலந்து கட்டி கலங்கடித்தன.

இதன் தொடர்ச்சியை என் அடுத்த கொமண்டில் தருகிறேன்.

அன்பு நித்யன்.

iniyavan said...

என் முடிவு!

தொட்டுப்பார்த்தேன். உடம்பு ஜில்லென்று இருந்தது. கூப்பிட்டு பார்த்தேன். ஒரு அசைவும் இல்லை.

"ஓஓ" என தேம்பி தேம்பி 21ம் நூற்றாண்டு சீதையாகிப் போன என் மனைவியைப் பார்த்து கதறி அழ ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு:

இதற்கு பிறகு ஒரு டிவிஸ்ட் என்னிடம் உள்ளது. ஆனால், கதா பாத்திரம் மனைவி என்று உள்ளபடியால் அதை எழுத மனம் மறுக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பக்கத்து டீபாயில் காஃபி கோப்பையில் இருந்தது.அருகே இருந்த சிகெரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவினேன்.அதின் அட்டையில்..எனக்கும் உங்க மேல அப்படி சந்தேகம் உண்டு எனக் கிறுக்கியிருந்தாள்.வாயில் வெள்ளையனை பொருத்தி..லைட்டரை ஆன் பண்ணும்போது..கேஸ் சிலிண்டரிலிருந்து வாயு கசியும் வாசனை.அதற்குள் அனிச்சையாக லைட்டர் எறி............

Cable சங்கர் said...

வந்து சொல்றேன்

Prathap Kumar S. said...

என் முடிவு:

"என்ன இன்னும் இவள் தீக்குளிச்சு பத்தினின்னு நிரூபிக்கலியேன்னு தொட்டுப்பார்க்கிறீங்களா? நான் அதுக்கு ரெடி ஆனா அதுக்கு நீங்க மட்டும் ஏகபத்தினிவிரதன் ராமன் ஒண்ணும் இல்லையே, உங்களுக்கும் உங்க ஆபிஸ்ல வேலைபார்க்குற ராதிகாவுக்கும் தொடர்பு இருக்குற விசயம் எனக்குத்தெரியும்... அப்படி எதுவும் இல்லன்னு தீக்குளிச்சு உங்களால நிரூபிக்க முடியுமா?

"இப்படி ஒரு சந்தேகத்தை அவகிட்ட சொல்லாமே இருந்திருக்கலாமோ..." அவளையே வெறித்துபார்த்துக் கொண்டிருந்தேன்...

(ஹீஹீஹீ... எத்தனை தமிழ்சினிமா, மெகாசீரியல் பாத்திருக்கோம்...)

butterfly Surya said...

யோசிச்சிட்டு வரேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முடிவு நீங்க ஏற்கெனவே யோசிச்சு வெச்சிருக்கிற முடிவோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமா?

நித்யன் said...

தொடர்ச்சி 2...

“ உங்களோட திட்டம் என்னான்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போயிடுச்சு. உங்க சர்ட் பாக்கெட்ல டிக்கெட் பாத்தேன். இன்னைக்கு ஈவ்னிங் ஷோவுக்கு ஐநாக்ஸ்ல இரண்டு டிக்கெட்.”

இதழோரம் குறும்பு கொப்பளிக்க மறைத்துக் கொண்டே நான் இருக்கையில்..

“தீவிர விசய் (எழுத்துப்பிழை இல்லை) ரசிகரான நீங்க இருந்துக்கிட்டே என்னை ஒரு விசய் படத்துக்கும் கூட்டிட்டு போக முடியலன்னு மனசுக்குள்ள மறுவிக்கிட்டு இருக்குறது தெரியும். அதை இப்படி ஒரு சாக்கு பண்ணி எனக்கு ஷாக் குடுக்கலாம்னு திட்டம் போட்டுருக்கீங்க. வேட்டைக்காரன் படத்தை கடைசி வரைக்கும் நான் தூங்காம பாத்தாத்தான் நான் பத்தினின்னு ஒத்துக்குவீங்க...?"

சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தாள்...

“ இதுக்கு நான் தீக்குளிக்கவே ரெடிங்க...”

அவளின் சற்றும் மனம் தளராத, நம்பிக்கையை நினைத்து ஸ்தம்பித்தேன்.

அன்று மாலை வேட்டைக்காரன் பார்த்து நாங்கள் நொந்தது மீதிக்கதை.

பிப்ரவரியில “அசல்” வருதாம்ல. ஐயய்யோ நான் மாட்டப்போறேன். அந்தக் கதைய அடுத்த போட்டிக் கதைல சொல்றேன்.

மணிஜி said...

/ஸ்ரீ said...
முடிவு நீங்க ஏற்கெனவே யோசிச்சு வெச்சிருக்கிற முடிவோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமா?//


கிட்ட தட்டவாவது.பின்ன பரிசு கொடுக்கிறோம்ல!!

Ashok D said...

”இன்னைக்கு நேத்தா பாக்கறன் கல்யாணமான 15 வருஷமா இப்படிதான் உளறிகிட்டே இருக்கீங்க, நீங்களே காபி போட்டு குடிங்க” என்று திரும்பி படுத்துக்கொண்டாள். இன்னைக்கி நைட்டாவது சரக்கடிச்சுட்டு உளரக்கூடாது என்று நினைத்துக்கொண்டே போர்வைவிட்டு எழுந்தேன். அடுத்த ஒரு மாதத்துக்கு நானே சமைக்கவேண்டியிருந்ததது என்பது தனிக்கதை.

சென்ஷி said...

@ தண்டோராஜி...

நீங்க இதுக்கு யாரும் எதிர்பார்க்காத நல்ல டிவிஸ்ட் உள்ள முடிவு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு நான் ஒரு பரிசு தர்றேன்.. டீல் ஓக்கேவா :)

Unknown said...

இனி வண்ணான் வேலை எனக்கு

Unknown said...

இனி வண்ணான் வேலை எனக்கு

மணிஜி said...

/சென்ஷி said...
@ தண்டோராஜி...

நீங்க இதுக்கு யாரும் எதிர்பார்க்காத நல்ல டிவிஸ்ட் உள்ள முடிவு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு நான் ஒரு பரிசு தர்றேன்.. டீல் ஓக்கேவா ://

டீல் சென்ஷி. ஆனா யாரும் எதிர்பார்க்காத முடிவுனு சொல்லமுடியாது.

சென்ஷி said...

//டீல் சென்ஷி. ஆனா யாரும் எதிர்பார்க்காத முடிவுனு சொல்லமுடியாது.//

:)

சரி. அப்ப நான் எதிர்பார்க்காத முடிவா இருந்தா கண்டிப்பா ஒரு பரிசு உங்களுக்கு உண்டு.

கலகலப்ரியா said...

நீங்க முற்போக்கா... பிற்போக்கா... இதெல்லாம் எனக்கு தெரியாது தண்டோரா... இது புனைவு என்றதன் பெயரில்... சீதை தீயாக இருந்திருக்க வேண்டியதின் தற்கால அவசியத்தை நினைத்து... பரிசுக்காக இல்லையெனினும்... உங்கள் வேண்டுகோளுக்காக...

கொலையும் செய்வாள் பத்தினி என்பதன் சாரம் இதில்லை என்று நினைத்து..

//
காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி. டியர் காபி என்றேன்.

பக்கத்தில்தான் படுத்திருந்தாள். இரவு அவளிடம் ஏடாகூடமாய் பேசியது மங்கலாக நினவில் இருந்தது. தொட்டு பார்த்தேன்.//

தலையணை காலியாக இருந்தது...! இரவு ஏற்றிய சரக்கின் போதை இன்னும் மிச்சமிருந்தது. தலைவலி கண்களைத் திறக்கவிடாது இழுத்துச் சொருகியது. சரக்கு பாட்டிலை பாக்கெட்டில் தேடுவது போல் தலையணையை கைகளால் துளாவினேன். கடுதாசி ஒன்று கையில் அகப்பட்டது..! எனக்கு மீதியிருந்த போதை தெளிந்து விட்டதுபோலிருந்தது. கண்களைக் கஷ்டப்பட்டு பிரித்து... இரண்டாக மடித்திருந்த அந்தக் கடுதாசியைப் பிரித்து... மங்கலாகத் தெரிந்த எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினேன்...

குட் மார்னிங் டியர்

பத்தினியாகத்தான் இருந்து கொண்டிருந்தேன்... இப்பொழுது அதை நிரூபிக்க வேண்டியதன் அவசியம் வந்து விட்டது... கிளம்புகிறேன்... என் எம்.டியிடம்...!

பின்குறிப்பு: ஆபீஸ் மீட்டிங் எதுவுமில்லை..

படித்து முடிக்கு முன்பாகவே.. போதை முற்றிலுமாகத் தெளிந்து... கண் திறந்திருந்தது..!

மணிஜி said...

ப்ரியா...பின் நவீனத்துவம் பின்னுது.

vasu balaji said...

எனக்கு புக் வேணாம். முடிவ சொல்லுங்க தலைவரே:))

ஜெட்லி... said...

நமக்கு அந்த அளவுக்கு கற்பனை வளம் கிடையாது...
நான் அப்படிக்க ஓரமா நின்னு யாருக்கு என்ன
புக் தரிங்கனு பார்த்துட்டு போறேன்....

creativemani said...

கண்விழித்து என்னைப் பார்த்த அவள்.. "இன்னும் கிளம்பலையா.. சீக்கிரம்.. அவரு வந்துடப் போறாரு என்றாள்"...

உங்கள் முடிவுடன் எவ்வளவு ஒத்துப்போகிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு பரிசை அனுப்பி வைக்கவும்.. ;)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எழுந்து அவள்பாட்டுக்கு அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்..,

குடிகாரன் பேச்சுமட்டுமல்ல குடிகாரன் பொண்டாட்டி பேச்சுக்கூட விடிஞ்சாப் போச்சு என்பதை மீண்டும் ஒருமுறை மெய்பித்தாள் எனது தர்மபத்தினி

கலகலப்ரியா said...

//எனக்கும் சொன்னால் நானும் ஒரு விளாசு!! //

mm... mail?

இளைய கவி said...

பக்கத்தில்தான் படுத்திருந்தாள். இரவு அவளிடம் ஏடாகூடமாய் பேசியது மங்கலாக நினவில் இருந்தது. தொட்டு பார்த்தேன். கோவமா டியர் என்றேன் ! சிரித்துகொண்டே சொண்ணால் இல்லங்க நீங்க ராமனா இருக்கும் வரைக்கும் நான் சீதைதானுங்க

சிவாஜி சங்கர் said...

அடடே..

வெண்பூ said...

அவள் அமைதியாக திரும்பிச் சொன்னாள். "நான் சீதையான்றத நிருபிக்கிறது முக்கியமில்ல, நீங்க ராமனான்னு பாருங்க, ஏன்னா எனக்குத் தெரிஞ்சு ராமர் கே(Gay) கிடையாது"

vasu balaji said...

எம்.டி. லேடியா பாஸ்:))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

எம்.டி. லேடியா பாஸ்:))//

ஆ.. இது என்ன புதுத் திருப்பம்...! அப்டி இருந்தாலும் பத்தினி பத்தினிதான்.. ! தண்டோரா... சீக்கிரம் போடுங்கையா புக்.. ஐ மீன்... முடிவு.. =))..

மணிஜி said...

/ கலகலப்ரியா said...
//எனக்கும் சொன்னால் நானும் ஒரு விளாசு!! //

mm... mail?//

vilambarakkaaran@gmail.com

மணிஜி said...

vilambarakkaaran@gmail.com

முடிவை யாரும் சரியாக சொல்லவில்லை என்று நினைகிறேன். அதனால் காலி விட்ட கம்பெனிக்கு என்று நிணைக்க வேண்டாம். எல்லோருக்கும் பரிசு உண்டு. சென்னையில் இருப்பவர்கள் புத்தக கண்காட்சியில் ஸ்டால் நம்பர் 121 (அகநாழிகை ஸ்டாலில்) பெற்றுக் கொள்ளலாம்.வெளியூர் நண்பர்கள் விலாசத்தை மின்னஞ்சல் செய்யவும்.கலகலப்ரியாவின் முடிவும், டி.வி.ஆர் சாரின் முடிவும் பிடித்திருந்தது. வெண்பூவும் வித்தியாசமான கோணத்தில் யோசித்திருந்தார்.உலக்ஸ்சும் யூகித்திருக்க கூடும். நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போம். வாழ்த்துக்கள்..

கலகலப்ரியா said...

=).. நான் அதையும் என்னோட பின்னூட்டத்ல போட்டிருக்கேன்..!

//கொலையும் செய்வாள் பத்தினி என்பதன் சாரம் இதில்லை என்று நினைத்து..//

அதனால எப்டியோ... புக் வேணும்.. =))... எழுத்தாளர் கையொப்பமுடன் கிடைப்பதென்றால் சும்மாவா...

வெளியீட்டுக்கு வாழ்த்துகள்...!

சுசி said...

ரெம்ப லேட்டா வந்துட்டோமோ..

கதை இப்டி முடியும்னு நான் நினைச்சுப் பாக்கல :)

Paleo God said...

WOW ஒரு சுகமான ஆச்சர்யம் நானும் TVR சார் மாதிரிதான் யோசித்திருந்தேன் (வட போச்சே::))

சரி வேலை இருந்ததுனால நைட் எழுதிடலாம்னு..நெனைச்சேன்... BUT முடிவு அது போலவே இருப்பதினால் ..I AM HAPPY. இப்போ போய் இத போட்டது தப்புன்னா SORRY SIR::)

//

அவள் அசையக்காணோம்..மீண்டும் கூப்பிட ஒரு மாதிரி இருந்தது. தலை வலி இப்போது வாந்தியை கூப்பிடுவது போல இருந்தது. ஒரு வேளை ராமர இழுத்தது தப்பா போச்சோ.. பகுத்தறிவு பாலமே பனால் ஆயிடிச்சே...சே என்ன இருந்தாலும் இவ கிட்ட அந்த மாதிரி... யோசனையின் போதே மீண்டும் வாந்தி வராமாதிரி.. அண்ணே எப்போவுமே சரக்கடிச்சி வாந்தி வராமாதிரி இருந்தா டக்குன்னு பக்கத்துல இருக்கரவன் தலைய மோந்து பாத்துடுங்க.. ஒடனே நின்னிடும்.. ஜானி சொன்னது நினைப்பு வர சரி நம்மாளுக்கு இயற்கையிலேயே மணம் உண்டான்னு (சிவனோட சாபமும் செர்ந்துகிட்டும்) லேசா தலகிட்ட போய் முகர்ந்து பாக்கச்சொல்ல ... என்ன இது வேற ஏதோ ஸ்மெல் ... மானங்கெட்ட மானிட்டரவிட...மோசமா...OH GOD .. இது காஸ் வாசன மாதிரி பதறி யம்மா ..ன்னு சவுண்ட் கேட்டதும் மெதுவா திரும்பி என்ன காஸ் ஸ்மெல்லா நாந்தான் தொறந்து வெச்சேன்..நீங்க ராமரா இருக்கறதுனாலதானே என்ன அப்படி கேட்டீங்க.. பத்த வைங்க யாரு பத்தினின்னு தெரிஞ்சிடும். உவீ ய்யிகே...பெரும் சப்தத்துடன் வாந்தி வந்தது... உள்ள இருக்கறது எல்லாம் வெளில வந்தா இப்படித்தான் நாறும்... சொல்லிக்கொண்டே ஜன்னலை திறந்தாள் வெளிச்சம் வந்தது..

இளைய கவி said...

//உள்ள இருக்கறது எல்லாம் வெளில வந்தா இப்படித்தான் நாறும்... சொல்லிக்கொண்டே ஜன்னலை திறந்தாள் வெளிச்சம் வந்தது..//

சூப்பரு வரிகள் !

Thamira said...

லேட்டா வந்ததால முடிவோடு படிக்கமுடிந்தது. நல்லாயிருந்தது பாஸ்.

Romeoboy said...

பின்னுடம் எல்லாம் கலக்கலா இருக்கு. முடிவு என்று நாம் நினைக்கும் ஏதும் இல்லை. ஒருவர் ரசனை ஒருவருக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம். ப்ரியாவின் முடியுரை ரசிக்கும் படி இருந்தாலும் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை. பத்தினி என்பதை தீ மூலம் தான் நிருபிக்க வேண்டுமா அல்லது அவனை விட்டு ஓடிப்போவது மூலம் தான் நிருபிக்க வேண்டுமா?

RAMYA said...

//
முன் குறிப்பு : சின்ன கதைதான். ஸ்கிரால் பண்ணாமல் படித்தால் பரிசு வெல்லும் வாய்ப்பு உண்டு.
//

ஸ்க்ரோல் பண்ணாமல் படிச்சுட்டேன் பரிசு எங்கே :)

RAMYA said...

கொஞ்சம் தாமதம் அதனால் முடிவு தெரிஞ்சி போச்சே :-)

புலவன் புலிகேசி said...

கொலையும் செய்வாள் பத்தினி..நீ பத்தினியா என கேட்டால்...கதை நன்று..

ஆரூரன் விசுவநாதன் said...

வணக்கம் தலைவரே.....

சீக்கிரம் முடிவப் போடுங்க.....முடியல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

இன்னொரு முடிவு...

பக்கத்தில் அவள் படுத்திருந்தாள்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.திடீரென அவனுக்கு கால்களில் எரிச்சல்..கால்கள் உணர்விழந்து உயிர் பெற்றது போல்..உள்ளங்கால்களைப் பார்த்தான்..இரு கால்களிலும் தீக் காயம்.போதையில் இருந்ததால் வலி இவ்வளவு நேரம் தெரியவில்லை.

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே..அனைவரும் தங்கள் விலாசத்தை மின்னஞ்சல் அனுப்பவும்.புத்தகம் அனுப்ப படும்.சென்னையில் உள்ள நண்பர்கள் ஸ்டால் எண் 121 ல் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம். நன்றி...

அப்துல் சலாம் said...

ஸ்கிரால் பண்ணாமல் எப்படி?

Ashok D said...

தலைவரே இது மீள்பதிவா... ஏற்கனவே படிச்சா மாதிரியிருக்கே.. especially முடிவு

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்
தரமாக உள்ளது.
நல்ல நடை

வால்பையன் said...

நல்ல முடிவாத்தான் தெரியுது!

நாணல் said...

அடடா.. ஏன் இந்த கொலை வெறி...

பா.ராஜாராம் said...

ரொம்ப லேட் பாஸ்.

வந்தனம்.